பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தினக் கொண்டாட்டம்: எஸ்.ஏ.ஸ்ரீதரின் ‘மௌனப்புரட்சி’ நூல் வெளியீடு!
on
Monday, April 27, 2026
By
Batticaloa
No comments
(க.ஜெகதீஸ்வரன்)
வாழைச்சேனை உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை பேத்தாழை பொது நூலகத்தில் விசேட புத்தக தினக் கொண்டாட்டமும், சிறப்பு நூல் வெளியீட்டு விழாவும் மிக விமர்சையாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் திகதி உலக புத்தக தினத்தை முன்னிட்டு எழுத்தாளர்களைக் கௌரவித்தல், புதிய நூல்களை அறிமுகம் செய்தல் எனப் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளைப் பேத்தாழை பொது நூலகம் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில், இவ்வருடம் நூலகத்தில் உத்தியோகத்தராகப் பணியாற்றும் எழுத்தாளரும், கவிஞரும் இதழாசிரியருமான எஸ்.ஏ.ஸ்ரீதர் எழுதிய 'மௌனப்புரட்சி - புத்தகங்கள் செதுக்கும் புதிய உலகம்' எனும் இருநூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நூல் ஆசிரியரின் சொந்தப் பதிப்பகமான 'தமிழ்த்தாய் புத்தக இல்லம்' ஊடாக மிக நேர்த்தியாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தனிமனித முன்னேற்றம் முதல் சமூகப் புரட்சி வரை, பொருளாதார மேலாண்மை முதல் மன அமைதி வரை வாசிப்பு என்பது ஒரு மனிதனை எவ்வாறு செதுக்குகிறது என்பதை ஆழமான சான்றுகளுடன் விளக்கும் ஒரு முழுமையான வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, சமகாலத்தில் வாசிப்பின் முக்கியத்துவத்தை மேலைத்தேய ஆய்வுப் பாணியில் முன்வைக்கும் ஒரு முக்கிய ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.
இந்நூலின் ஆசிரியரான எஸ்.ஏ.ஸ்ரீதர், வாகரையில் உள்ள வெல்லையடிமடு எனும் கிராமத்தில் 1984இல் பிறந்தவர். 1990களில் நிலவிய உள்நாட்டுச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து வாழைச்சேனையில் குடியேறினார். வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் உயர்தரம் வரை பயின்ற இவரை, மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நிமலன் சௌந்தரநாயகம் அவர்கள் எழுத்துத்துறையில் இனங்கண்டு ஊக்குவித்தார்.
தனது 16ஆவது வயதிலேயே கவிதை மற்றும் கதைகளை எழுத ஆரம்பித்த ஸ்ரீதர், இன்று கோறளைப்பற்று பிரதேசத்தின் மிகச்சிறந்த கலை, இலக்கிய ஆர்வலராகவும் ஆவணப்படுத்தல் பணியாளராகவும் மிளிர்கின்றார். ஏற்கனவே இவரது படைப்புகளாக:
• தனித்திருக்கிறான் ஒரு தமிழன் (2003) - கவிதைத் தொகுப்பு
• சங்கத்தமிழ் சிறுகதைகள் (2004) - சங்க இலக்கியங்களின் கதை வடிவம்
• ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் இவர்கள் (2006)
என்றும் வாழும் எங்கள் அமரர் முருகேசு தவராஜா (2016) உள்ளிட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள 'மௌனப்புரட்சி' இவரது ஐந்தாவது நூலாகும். அத்துடன் இவரது வரலாற்று நாடக நூலான 'எல்லைகாக்கும் வீர மாகாளியம்மன்' மற்றும் அவர் தொகுத்துள்ள 'வாழைச்சேனை தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள்' ஆகிய நூல்கள் விரைவில் வெளிவரத் தயாராக உள்ளன.
நூலகப் பொறுப்பாளர் திருமதி. புஸ்பா தயாளன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மூத்த எழுத்தாளர் கலாபூசணம் எச்.மெத்தியேஸ் அவர்கள் நூலினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சு.சுதாகரன் அவர்கள் நூலாசிரியரிடமிருந்து முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார்.
நூல் அறிமுக உரையை நிகழ்த்திய சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லா ஹாரூன் உரையாற்றுகையில்,
'மன அழுத்தங்களுடன் ஓய்வில்லாப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மாத்திரமன்றி சகலரும் வாசிக்க வேண்டியதொரு முக்கியமான நூல் இது. இதனை வாசித்து முடித்தபோது எனக்குள்ளேயே ஒரு பெரிய மாற்றத்தை இந்த 'மௌனப்புரட்சி' உண்டாக்கியுள்ளது. எழுத்தாளர் ஸ்ரீதர் எமது நூலகத் துறையின் பெருமிதம்,' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆசிரிய ஆலோசகர் எ.த.ஜெயரஞ்சித், தனது மாணவனான ஸ்ரீதரின் இலக்கிய வளர்ச்சியைப் பாராட்டியதுடன், அவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ந.நிமல்ராஜ், செயலாளர் எஸ்.ராஜ்கீதன் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தனது எழுத்துப் பணிகளுக்காக 2019ஆம் ஆண்டில் 'கலைஞர்' விருது பெற்ற எஸ்.ஏ.ஸ்ரீதர், தற்போது பொது நூலக உத்தியோகத்தராகப் பணியாற்றிக் கொண்டே இலக்கிய உலகிற்குத் தொடர்ந்து வலுச்சேர்த்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Whatsapp
You may like these posts
பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தினக் கொண்டாட்டம்: எஸ்.ஏ.ஸ்ரீதரின் ‘மௌனப்புரட்சி’ நூல் வெளியீடு!