மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் அடகு நிறுவன முகாமையாளர் கோடி மதிப்பிலான நகைகள், பணத்துடன் தலைமறைவு
on
Sunday, April 26, 2026
By
Batticaloa
No comments
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர், ஒரு கோடியே 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலட்சம் ரூபாய் பணத்துடன் தப்பியோடியுள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் குறித்த முகாமையாளர், நிறுவனத்தின் கணக்காளரை அணுகி, "நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் தனது கணவருடன் தகராறு செய்துள்ளார்.எனவே அவர்கள் நகைகளை பார்வையிட வருவார்கள்," என கூறி, பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து நகைகளை எடுத்துத் தனது மேசையில் வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கொழும்பு தலைமை அலுவலகத்திலிருந்து வங்கி வைப்பிலிடப்படாத பணம் குறித்து கேட்கப்பட்டபோது, அங்கிருந்த 17 இலட்சம் ரூபாய் பணத்தை தான் வங்கியில் வைப்பிலிட போவதாக கூறி கணக்காளரிடமிருந்து முகாமையாளர் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதன் பின்னர், நகைகளை வாடிக்கையாளரிடம் காட்டிவிட்டு வருவதாக கூறி, நகைகள் மற்றும் பணத்துடன் பிற்பகல் 2.30 மணியளவில் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளார். மாலை நேரமாகியும் அவர் பணிக்கு திரும்பாததால், அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அது செயலிழப்பிலிருந்தது. அவர் திட்டமிட்டே நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்திருட்டு சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் கணக்காளர் ஞாயிற்றுக்கிழமை (26) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். தலைமறைவாகியுள்ள முகாமையாளர் நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Batticaloa
Whatsapp
You may like these posts
Batticaloa
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் அடகு நிறுவன முகாமையாளர் கோடி மதிப்பிலான நகைகள், பணத்துடன் தலைமறைவு