92 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் மாணவர் கைது
on
Sunday, April 26, 2026
By
Batticaloa
No comments
சுமார் 92 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகள், இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி என்பவற்றை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த 19 வயதுடைய மாணவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு-14 பகுதியைச் சேர்ந்த இந்த மாணவர், கடந்த 24ஆம் திகதி டுபாய்க்குச் சென்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 02.00 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EM-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்ட கிரீன் சேனல் ஊடாக இந்த பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே, அங்கிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபர் கொண்டு வந்த 03 பயணப் பொதிகளுக்குள் வெளிநாட்டு உற்பத்தியான மென்செஸ்டர் மற்றும் பிளாட்டினம் வகையைச் சேர்ந்த 278 கார்ட்டூன்கள், 70 அலகு இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் 55 அங்குல அகலத் திரை கொண்ட ஒரு தொலைக்காட்சிப் பெட்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 9,222,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Whatsapp
You may like these posts
92 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் மாணவர் கைது