டித்வா பாதிப்பு: இடைக்கால தங்குமிட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
manel
April 28, 2026
உள்நாடு
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்கள், கூடாரங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்காக இடைக்கால தங்குமிடங்களை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டித்வா சூறாவளி தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 6,088 வீடுகள் முழுமையாகவும், 115,179 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 2026-04-22 ஆம் திகதி வரை 494 குடும்பங்கள் நாட்டின் 4 மாவட்டங்களில் உள்ள 20 பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதுடன், மேலும் பல குடும்பங்கள் கூடாரங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை இழந்த குடும்பங்கள், புதிய வீடுகளை அமைக்கும் வரை வாடகை வீடுகளில் தங்குவதற்காக 25,000/- ரூபா மாதாந்த வாடகைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், அந்தப் பகுதிகளில் வாடகைக்கு வீடுகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலவுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சமர்ப்பித்துள்ள வீட்டுத் திட்டத்திற்கமைய, இலங்கை இராணுவத்தின் மனிதவளப் பங்களிப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு மையங்கள் மற்றும் கூடாரங்களில் தங்கியுள்ள 1,000 குடும்பங்களுக்கு, நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை இடைக்கால தங்குமிடங்களை அமைத்துக் கொடுப்பதற்காகப் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Share Now
Facebook
Twitter
Linkedin
Pinterest
டித்வா பாதிப்பு: இடைக்கால தங்குமிட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி