அரச வைத்தியசாலைகளில் PET Scan பரிசோதனை நிறுத்தம்
manel
April 28, 2026
உள்நாடு
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய அரசாங்க வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பெட் ஸ்கேன் (PET scan) பரிசோதனைகள் மார்ச் 27 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் FDG – Fluoro deoxy glucose எனும் கதிரியக்க இரசாயனப் பொருள் இல்லாததே இதற்குக் காரணம் என அந்தச் சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கதிரியக்க இரசாயனம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனினும், விநியோகஸ்தரின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) பதிவு புதுப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விநியோகஸ்தர் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்ததை மாற்றி, ‘மருந்து’ (Medicine) பிரிவின் கீழ் பதிவு செய்யுமாறு குறித்த நிறுவனத்திற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குமுறை அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதன்படி, பழைய பதிவு முடிவடைந்த மார்ச் 27 ஆம் திகதியே புதிய நிபந்தனைகளுக்கு அமைய நிறுவனம் விண்ணப்பித்திருந்த போதிலும், இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பதிவுப் பிரச்சினை காரணமாக, இலங்கைக்கு FDG கதிரியக்க இரசாயனத்தைக் கொண்டு வர எந்தவொரு நிறுவனத்திற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய இரண்டு அரச வைத்தியசாலைகளில் மட்டுமே பெட் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பரிசோதனையைச் செய்து கொள்வதற்காக ஏற்கனவே 4 மாதங்களுக்கும் மேலான காத்திருப்புப் பட்டியல் நிலவுகிறது.
தனியார் வைத்தியசாலைகளில் இப்பரிசோதனையை மேற்கொள்வதற்கு 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவாகும்.
எனினும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவு இல்லாத காரணத்தினால், தற்போது தனியார் துறையினராலும் இந்தப் பரிசோதனையை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெட் ஸ்கேன் பரிசோதனை மூலம்:
புற்றுநோய் செல்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதுடன் அவற்றின் செயல்பாடுகளையும் கண்டறியலாம்.
புற்றுநோய் செல்கள் பரவியுள்ள அளவைத் துல்லியமாகத் தீர்மானிக்கலாம்.
புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்குப் பின்னர், புற்றுநோய் செல்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தலாம்.
புற்றுநோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாத இந்தப் பரிசோதனை தடைப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண சுகாதார அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Share Now
Facebook
Twitter
Linkedin
Pinterest
அரச வைத்தியசாலைகளில் PET Scan பரிசோதனை நிறுத்தம்