அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு
on
Wednesday, April 29, 2026
By
Batticaloa
No comments
கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அதேவேளை, அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் காணிப் பிணக்கு காரணமாக, கடந்த 25ஆம் திகதி இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிஸார், கடந்த திங்கட்கிழமை வாக்குமூலம் பெறுவதற்காக அர்ச்சுனாவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, பின்னர் அவரைக் கைது செய்தனர். அன்றைய தினம் அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதன்படி, இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், எதிர்தரப்பினருடன் எவ்வித தொடர்புகளையும் பேணக் கூடாது எனும் கடும் நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்குப் பிணை வழங்கி நீதிமன்று உத்தரவிட்டது.
Whatsapp
You may like these posts