தொலைபேசி ஊடாகத் தொல்லை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் - பொலிஸ் தெரிவிப்பு
on
Wednesday, April 29, 2026
By
Batticaloa
No comments
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக, அண்மையில் திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழக்கு நடவடிக்கைகள் பிரிவின் பொறுப்பதிகாரியும், சட்டத்தரணியுமான திலன் குமார இது தொடர்பில் தெரிவிக்கையில்,
2024-ஆம் ஆண்டின் 39-ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தப்பட்ட) சட்டத்தின் 32-ஆவது பிரிவின் கீழ் இத்தகைய குற்றங்கள் தண்டனைக்குரியவை.
நியாயமான காரணமின்றி, ஒருவரைத் துன்புறுத்தும் அல்லது குழப்பமடையச் செய்யும் நோக்கில் தொடர்ச்சியாகத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புவது குற்றமாகக் கருதப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் விளக்கத்தின் படி,தனிப்பட்ட நபர்களின் தொலைபேசி இலக்கங்களை அவர்களது அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிர்வது அல்லது தவறான தகவல்களுடன் பரப்புவதும் இதே சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு அதிகபட்சமாக 1,00,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படலாம். தண்டப்பணத்தை செலுத்தத் தவறினால் 06 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட ஏற்பாடுகள், தொல்லைக்கு உள்ளாகும் நபர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு கருவியாக இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான தொல்லைகளுக்கு உள்ளாகும் பொதுமக்கள், அது குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அல்லது தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp
You may like these posts
தொலைபேசி ஊடாகத் தொல்லை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் - பொலிஸ் தெரிவிப்பு