போதைப்பொருள் கடத்தல் - 22 தேரர்களும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
on
Sunday, May 03, 2026
By
Batticaloa
No comments
தாய்லாந்தில் இருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஸ் ரக போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்களையும், கடத்தி வரப்பட்ட குறித்த போதைப்பொருட்களை விமான நிலையத்தில் பெறுவதற்காக வந்திருந்த, அகுனுகொலே அமிதானந்தா தேரரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தை விசாரித்து வரும் உதவி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச இதுகுறித்த மன்றில் தெரிவிக்கையில்,
சந்திரகுமார தயாரத்ன என்ற சந்தேகநபர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 12ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குறித்த சந்தேகநபர் மூன்றாவது நபராகப் பெயரிடப்படுவார்.
அதேபோல், இவ்வழக்கில் அகுனகொல அமிதானந்தா தேரரால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் அம்பகஸ்முல்ல புன்யரத்னா தேரர் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் அந்தத் தேரர் தலைமறைவாக உள்ளார். இவ்வழக்குகளில் அந்தத் தேரர் நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி தாய்லாந்து சென்ற தேரர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கி, அந்த நாட்டிலிருந்து சம்பவத்தை வழிநடத்தியவருமான தம்மரக்கித்த அல்லது தம்மா என்ற தேரரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் அந்தத் தேரர் இந்த வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார் என்று உதவி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும், கடந்த 25ஆம் 22 தேரர்களும் இலங்கைக்கு வந்தபோது, தம்மா என்ற தேரர் அவர்களுக்கான பயணப் பெட்டிகளைத் தயார் செய்திருந்தார் என்று மன்றில் ராஜபக்ச தெரிவித்தார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (25) இரவு 22 சந்தேகநபர்கள் பெருமளவான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கடந்த சனிக்கிழமை (25) இரவு 10.10 மணி அளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் மூலம் வருகை தந்த தேரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்களது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிகமான குஷ் மற்றும் ஹஷீஸ் போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஒவ்வொருவரும் தலா 5 கிலோவுக்கும் மேல் எடுத்துச் வந்திருந்தனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் கைப்பற்றல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Whatsapp
You may like these posts